புரட்சி நாயகர்

புரட்சி என்பது அதுநாள் வரைக்கும் எவரும் செய்யாத செய்து அறியாத, சொல்லாத சொல்லி அறியாத, பிற்றை நாளில் வர இருக்கும் சமூகத்தினரும் சந்ததியினரும், பின்பற்றக்கூடியதாகவும் வழிகாட்டியாகவும் அமையக்கூடிய செயலோ அல்லது சொல்லோ ஆகும். இந்த இலக்கணத்திற்கு ஒரு முழு வடிவம் கொடுத்தவர் அப்பர் சுவாமிகள்.


சூலை நோய்க்கு நன்றி சொன்னவர் :

தமக்குத் தீங்கு செய்த எந்த ஒரு பொருளையோ, மனிதரையோ, மனிதரைத் தவிர்த்த உயிரினத்தையோ, ஏன் தனக்கு வந்த நோயையோ எவரும் மன்னித்ததில்லை. தன் உயிரையும் உடம்பையும் பதம் பார்க்க பல்லவ மன்னனால் பரிந்துரைக்கப்பட்ட நீற்றறையையோ, நஞ்சாகி வந்த பாற்சோற்றினையோ, மன்னன் தன் தலையால் இட்டப் பணியைத் தன் காலால் செய்து முடிக்க காலன் உருவில் வந்த யானையையோ, ஆழ் கடலுக்குள் அழுத்திக் கொல்ல வந்த கல்லையோ, இவ்வளவுக்கும் காரணமாயிருந்து அனைத்து நிகழ்வுகளையும் அரங்கேற்றம் செய்த சமணர்களையோ சுவாமிகள் வைதாரில்லை, சபித்தாரில்லை. இறைவன் திருவருளால் அவரது உடலைப் பதம் பார்க்க வந்த நீற்றறை எதனையும் பதப்படுத்தும் குளிர்சாதன அறையாக மாறியது. நஞ்சு பஞ்சாகிப் பறந்து உணவு அமுதமானது. கொல்ல வந்த யானை வணங்கிச் சென்றது. பல்லவன் உள்ளத்தில் இல்லாத ஈரம் கல்லுக்குள் இருந்தது. எனவேதான் மனமெனும் தோணி பற்றி மதியெனும் கோலை ஊன்றி, மதி, நதி சடையில் வைத்த மன்னவன் ஐந்தெழுத்தாம் புணை பிடித்து நிற்க, அவர் பாடல் கேட்க பாடலீஸ்வரர் திருவுள்ளம் கொண்டார். கல் தெப்பம் ஆனது. இவ்வளவு செயல்களுக்கும் அடித்தளமாக அமைந்தது அவருக்கு வந்த சூலை நோய். அது மட்டும் வந்திருக்காவிடில் தான் சைவ சமயத்திற்கு வந்திருக்க முடியாது, இறைவனை நினைத்திருக்க முடியாது அவனுடைய குனித்தப் புருவத்தையும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பையும் கண்டிருக்க முடியாது என்று சொல்லி தனக்கு வந்த நோயை வணங்குகிறார் சுவாமிகள்.

பொய்வாய்மை பெருக்கிய புன்சமயப் பொறிஇல் சமண் நீசர் புறத்துறையாம்
அவ் ஆழ்குழியின் கண்விழுந்து எழும் ஆறு அறியாது மயங்கி அவம்புரிவேன்
மைவாச நறுங்குழல் மாலையாள் மணவாளன் மலர்க்கழல் வந்தடையும்
இவ்வாழ்வு பெறத்தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என்கொல் எனத்தொழுவார்
            – திருநாவுக்கரசர் புராணம் -72/ பெ.பு

உண்ணா நோன்பு :

முதன் முதலில் கொடுமைக்கு எதிரான அறப்போராட்டமாக உண்ணாவிரதம் இருந்து வெற்றி கண்டவர் நம் அப்பர் சுவாமிகள். கும்பகோணம் அருகே பழையாறை வடதளி என்னும் தலத்தில் சமணர்கள் சிவன் கோயிலை மறைத்து சமண் பாழியாக கட்டியிருந்தனர். அதனை நீக்கி சிவன் கோயிலை மீட்டுத் தரும்படி சுவாமிகள் உண்னாவிரதம் இருந்தார். மன்னனும் அவர் கோரிக்கையை ஏற்று அக்கோயிலை மீட்டான்.

தலையெலாம் பறிக்கும் சமண் கையருள்
நிலையினான் மறைத்தால் மறைக்கொண்ணுமே
அலையினார் பொழில் ஆறை வடதளி
நிலையினானடியே நினைந்து உய்மினே
            -5 ஆம் திருமுறை

தந்தைக்கு முதலிடம் கொடுத்தவர் :

ஏனைய அருளாளர்களெல்லாம் தாய்க்கு முதலிடம் கொடுத்துப் பாடியுள்ளனர். "தாயும் நீயே தந்தை நீயே" என்று சம்பந்தரும், "அம்மையே அப்பா" என்று மணிவாசகப் பெருமானும், "அன்னையே என்னேன்" என்று சுந்தரரும் இறைவனைப்பாட அப்பர் சுவாமிகள், "அப்பன் நீ அம்மை நீ அன்புடைய மாமனும் மாமியும் நீ்" என்று தொடங்குகிறார்.


பிறவியை வேண்டியவர் :

சைவ சமயத்துள் முதல் நாயன்மாராக விளங்கும் காரைக்கால் அம்மையார் தொடங்கி பின் வந்தோர் அனைவரும் பிறவாமையையே விரும்பினர். ஆனால் அப்பர் சுவாமிகள் இறைவனுடைய எளி வந்த தன்மையையும் எழில்மிகு தோற்றத்தையும் காண மீண்டும் ஒரு பிறவி இருந்தாலும் அதனையும் வரவேற்கிறார்.

குனித்தப் புருவமும் கொவ்வை செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால்வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே
            -5 ஆம் திருமுறை

அஞ்செழுத்து அமைந்த அதிசயம் :

அப்பர் சுவாமிகள் அருளிய திருமுறைகளில் நடுவே அமைந்தது ஐந்தாம் திருமுறை. அது 100 பதிகங்களைக் கொண்டது. அதில் நடுவே இருப்பது 51 ஆவது பதிகம். அந்தப் பதிகத்தில் நடுவே இருப்பது 6 ஆவது பாடல். அந்தப் பாடலில் நடுவாக உள்ள 2 ஆவது வரியில் அமைந்திருக்கும் சொல் அஞ்செழுத்து மந்திரமாகிய "சிவாய" என்பது.

விண்ணிணார் பணிந்து ஏத்த வியப்புறும்
மண்ணிணார் மறவாது சிவாய என்று
எண்ணிணார்க்கு இடமா எழில் வானகம்
பண்ணிணார் அவர் பாலைத்துறையரே
- 5 ஆம் திருமுறை

பாடல் அமைப்பு முறையிலே புதுமையைக் கையாண்டவர் :

முதன் முதலிலே திருத்தாண்டக அமைப்பைப் புகுத்தியவர் - 6 ஆம் திருமுறை தாண்டக அமைப்பில் அமைந்தது. தாண்டக அமைப்பு என்பது எட்டு சீர்கள் கொண்ட நான்கடிச் செய்யுள். இதில் அடிதோறும் 3,4,7,8 சீர்களை நீக்கிப் படித்தால் கொச்சகக் கலிப்பா என்னும் புதிய பாடல் அமைப்பு கிடைக்கும். பொருள் மாறாது இருப்பதையும் காணலாம்.

வண்ணங்கள் தாம்பாடி வந்து(3) நின்ற(4)
வலிசெய்து வளைகவர்ந்தார் வந்து(7) நம்மைக்(8)
கண்ணம்பால் நின்றெய்து கனலப்(3) பேசிக்(4)
கடியதோர் விடையேறிக் காபா(7) லியார்(8)
சுண்ணங்கள் தாங்கொண்டு துதையப்(3) பூசித்(4)
தோலுடுத்து நூல்பூண்டு தோன்றத்(7) தோன்ற(8)
அண்ணலார் போகின்றார் வந்து(3) காணீர்(4)
அழகியரே ஆமாத்தூர் ஐய(7) னாரே(8).

இப்பாடலில் 3,4,7,8 என வரும் சொற்களை நீக்கி விட்டால்,
வண்ணங்கள் தாம்பாடி வலிசெய்து வளை கவந்தார்
கண்ணம்பால் நின்றெய்து கடியதோர் விடையேறிச்
சுண்ணண்கள் தாங்கொண்டு தோலுடுத்து நூல்பூண்டு
அண்ணலார் போகின்றார் அழகியரே ஆமாத்தூர்.

எனப் புதிய பாடல் வருவதைக் காணலாம்.

அது மட்டுமல்ல திருஅங்கமாலை என்னும் பதிகம் பாடியுள்ளார். நம் உடல் உறுப்புக்களின் கடமையை அழகாக அதில் குறிப்பிட்டுள்ளார். திருவாரூர் பதிகத்தில் பாடல்தோறும் ஈற்றடியில் ஒரு பழமொழியை வைத்துப் பாடியுள்ளார். ஐந்தாம் திருமுறையில் சித்தத்தொகை என்னும் 97 ஆவது பதிகத்தில் 30 பாடல்கள் உள்ளன. அ முதல் அக்கு வரையிலும் பின்பு க முதல் ன வரை உள்ள எழுத்துக்களைக் கொண்டு தொடங்கும் பாடல்களை இயற்றியுள்ளார். எந்தப் பாடலிலும் தம்முடைய பெயரை அவர் குறிப்பிடவில்லை. தாம் அவதரித்த ஊரின் பெயரையும் தம்முடைய பெற்றோர்கள் பெயரையும் எங்கும் குறிப்பிடவில்லை.திருமணம் செய்து கொள்ளவில்லை. இவை மட்டுமல்ல பாடல்களில் பல இடங்களில் பல புதுமைகளையும் சிறப்புக்களையும் கையாண்டுள்ளார் நம் அடிகள். இவரை நாம் புரட்சி நாயகர் என்று அழைத்தால் அது சரியாக இருக்கும் அல்லவா?