தேவாரத் தலங்கள்
அடியார்பெருமக்களுக்கு வணக்கம். இந்தப் பகுதியில் பகுதி (நாடு) வாரியாக தேவாரத் தலங்களைப் பற்றிய விவரங்களை அறிய இருக்கிறோம். மொத்தம் 276 தலங்கள் உள்ளன. மூவர் பெருமக்கள் பாடிய தலங்கள் நூற்றுக்கணக்கில் இருந்தாலும் பாடல் பெற்றத் தலங்கள் என்று நமக்குக் கிடைத்தவை 276 தலங்கள்தாம். இந்தத் தலங்களுக்கெல்லாம் மூவர் பெருமக்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் எந்தவித வசதியான சாலை வசதியும் வாகன வசதியும் இல்லாத காலத்தில் பெரும்பாலும் நடந்தே சென்று (அதிலும் குறிப்பாக நமது வாகீசர் பெருமானான திருநாவுக்கரசு சுவாமிகள் தமது 81 ஆவது வயது வரை நடந்தே சென்றுள்ளார்) இறைவனைத் தொழுது, தூமலர் தூவித், துதித்து நின்று அழுது காமுற்று அரற்றி நம் கிளை கிளைக்க, நம் உடற்பிணியும், உயிர்ப்பிணியும் ஒருங்கே அகல, மனிதர்காள் இங்கே வம்மின் புனிதன் பொற்கழல் ஈசன் எனும் கனி உள்ளது அக்கனி தந்தால் உண்ணவும் வல்லிரோ என நம்மை எல்லாம் கூவி அழைத்து, இறைவன் புகழைத் தலங்கள்தோறும் சென்று பாடியுள்ளனர்.


அந்தத் தலங்களையெல்லாம் நாமும் நம்முடைய எதிர்காலச் சந்ததியினரும் சுலபமாகச் சென்று தரிசனம் செய்யவேண்டும் என்ற நோக்கில் அத்தலங்களின் அமைவிடம், வரிசை எண், வரலாறு, வழித்தடம், இறைவன், இறைவி திருநாமங்கள், தீர்த்தம், தலமரம், பாடியவர்கள், கோயில் தொடர்பான படங்கள், பாடல்கள், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றைத் தந்துள்ளோம்.


வாழ்க்கையில்,கல்விப்பயணம், விளையாட்டுப்பயணம், சுற்றுலாப்பயணம், வணிகப்பயணம், அரசுமுறைப்பயணம் என்று பல பயணங்களை மேற்கொள்ளுகிறோம். எல்லாப் பயணங்களுமே எதாவது ஒரு வகையில் நம்முடைய உடலை வளர்க்கவும் அதனை மேம்படுத்தவும் மட்டுமே பயன்படும். ஆனால் ஆன்மிகப்பயணம் ஒன்றுதான் நம் உயிரை வளர்க்கும், மேம்படுத்தும். (வயிற்றுக்கு) இரை தேடுவதோடு (உயிருக்கு) இறையையும் தேடு என்றார் பாம்பன் சுவாமிகள். அந்த வகையில் இந்தத் தலங்களையெல்லாம் சென்று தரிசித்து பயன் பெறுமாறு நும் பாதம் பணிந்து அழைக்கின்றோம். பயணிப்போம் வாருங்கள். நன்றி.